எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி
|எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
சான் சால்வடார்,
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு தற்போது சால்வடார் லீக் கால்பந்து நடைபெற்று வருகிறது.
இதன் கால் இறுதி போட்டி அலியான்சா மற்றும் எப்.ஏ.எஸ். என்ற இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
இந்த போட்டியை வெளியில் இருந்தும் மரங்கள், உயரமான கட்டிடங்களில் ஏறி ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென வெளியில் நின்ற ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயில் கேட்டை உடைத்துக் கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதையடுத்து 16 நிமிடங்களில் போட்டி இடை நிறுத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எனவே கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியாகினர். சிறுவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.