< Back
உலக செய்திகள்
சிறிய தீவில் உணவு, தண்ணீர் இன்றி 6 நாட்களாக பரிதவித்த 11 மீனவர்கள்..!!
உலக செய்திகள்

சிறிய தீவில் உணவு, தண்ணீர் இன்றி 6 நாட்களாக பரிதவித்த 11 மீனவர்கள்..!!

தினத்தந்தி
|
20 April 2023 2:28 AM IST

ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய தீவில் உணவு, தண்ணீர் இன்றி 6 நாட்களாக 11 மீனவர்கள் பரிதவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளை கடந்த வாரம் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது அங்குள்ள புரூம் நகருக்கு அருகே கடலில் இந்தோனேசியாவின் 2 மீன்பிடி படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. 2 படகுகளிலும் தலா 10 மீனவர்கள் இருந்தனர்.

அப்போது அதில் ஒரு படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. அந்த படகில் இருந்த 10 மீனவர்களில் 9 பேர் மாயமாகினர். எஞ்சிய ஒரு மீனவரை மற்றொரு படகில் இருந்தவர்கள் மீட்டனர்.

அதை தொடர்ந்து 11 மீனவர்கள் இருந்த படகு புரூம் நகருக்கு அருகே உள்ள பெட்வெல் தீவில் கரை ஒதுங்கியது. படகு முற்றிலுமாக சேதமடைந்ததால் அவர்களால் திரும்பமுடியாமல் தீவில் சிக்கிக்கொண்டனர்.

ஆள் அரவமற்ற அந்த தீவில் உண்ண உணவு கிடைக்காமலும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் பரிதவித்து வந்த மீனவர்கள் தங்களை மீட்பதற்கு யாராவது வருவார்கள் என காத்திருந்தார்கள்.

இந்த நிலையில் பெட்வெல் தீவுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை விமானம் தீவில் மீனவர்கள் சிக்கியிருப்பதை கண்டுபிடித்தது.

இதனையடுத்து, ஹெலிகாப்டர்களில் அங்கு விரைந்த மீட்பு குழு, 6 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி உயிர் பிழைத்திருந்த 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது. அதை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் புரூம் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்