முதியோர் காப்பகத்தில் 103 வயதில் பிறந்தநாள் கொண்டாட்டம்; பாட்டிக்கு காத்திருந்த ஆச்சரியம்
|வெரா சாக்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, அவரின் மகன்களான ராபர்ட் மற்றும் ஜான் ஆகிய 2 பேரும் வரவழைக்கப்பட்டனர்.
லண்டன்,
இங்கிலாந்தின் லிங்கன்ஷைர் பகுதியில் கிரிம்ஸ்பை என்ற இடத்தில் செஸ்ட்நட்ஸ் என்ற பெயரில் முதியோர் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இதில், வயது வித்தியாசமின்றி பெண்கள், ஆண்கள் என பலரும் தங்கியுள்ளனர்.
இதில் வெரா சாக் என்ற மூதாட்டிக்கு கடந்த 1-ந்தேதி பிறந்த நாள் வந்தது. 103 வயது தொட்ட அவருடைய பிறந்த நாளை கோலாகலத்துடன் கொண்டாடுவது என அந்த காப்பகம் முடிவு செய்தது.
இதற்காக, அறையொன்றை தேர்வு செய்து அதனை நியான் வகை வண்ண விளக்குகளால் ஒளி பெற செய்தனர். ஒளிரும் குச்சிகளையும் தொங்க விட்டனர். பல வண்ண பலூன்களும் கட்டி பறக்க விடப்பட்டன. ஒரு கிளப் போன்ற சூழலுக்கு அந்த அறை உருமாற்றப்பட்டது. ஆட்டம், பாட்டம் என அமர்க்களப்பட்டது.
வெரா சாக், பச்சை வண்ணத்தில் ஒளிரும் கண்ணாடி அணிந்தபடி, பின்னணியில் ஒலிக்கும் பாட்டுக்கு ஏற்ப நடனம் ஆடியதுடன், அவரே பாடல்களை பாடினார். தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சி பற்றி காப்பக மேலாளர் எம்மா பிலிப்ஸ் கூறும்போது, எங்களுடைய காப்பகத்தில் வசிப்பவர்களின் பிறந்த நாளுக்காக நாங்கள் எப்போதும் சிறந்த நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடுகிறோம். இந்த விருந்து நிகழ்ச்சிக்காக எங்கள் குழுவினர் நம்ப முடியாத அளவுக்கு கடுமையாக உழைத்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 103 வயது ஆவதில்லை என்று கூறியுள்ளார்.
இந்த கொண்டாட்டம் பற்றி குறிப்பிட்ட, குழுவின் தலைமை நடவடிக்கை அதிகாரி டிரேசி அட்கின்ஸ் கூறும்போது, எங்களுடைய காப்பகங்கள் அனைத்தும், வசிப்போரின் தனித்துவம் மற்றும் தனித்தன்மைகளை ஊக்குவிக்கும் வகையிலேயே செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான கொண்டாட்டம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டு வருவதற்காக எங்களின் பணியாளர்கள் உண்மையில் மிக சிறந்த பணியை செய்கிறார்கள். ஆனால், இது சற்று சிறப்பானது. வெரா சாக்கின் பிறந்த நாளை இதுபோன்று ஆச்சரியம் தரும் நிகழ்வாக கொண்டாட திட்டமிட்டு, அர்ப்பணிப்புடன் மற்றும் கடுமையாக உழைத்துள்ளது எனக்கு ஆழ்ந்த மதிப்புணர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த கொண்டாட்டத்திற்கு அந்த காப்பகத்தில் உடன் இருப்பவர்கள் வந்திருந்தனர். அதனுடன், வெரா சாக்கின் மகன்களான ராபர்ட் மற்றும் ஜான் ஆகிய 2 பேரும் வரவழைக்கப்பட்டனர். இதுபற்றி ஜான் கூறும்போது, காப்பகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியை விட கூடுதலான வேலையை செய்துள்ளனர். காப்பக பணியாளர்கள் பாராட்டப்பட கூடியவர்கள் என்றே நான் நினைக்கிறேன். இதனை விட சிறந்த தருணம் வேறில்லை. இந்த அறை முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது என கூறினார்.