< Back
உலக செய்திகள்
காசாவில் 100 ராக்கெட் ஏவுதளங்கள் அழிப்பு; இஸ்ரேல் ராணுவம் அதிரடி
உலக செய்திகள்

காசாவில் 100 ராக்கெட் ஏவுதளங்கள் அழிப்பு; இஸ்ரேல் ராணுவம் அதிரடி

தினத்தந்தி
|
16 Jan 2024 4:15 PM IST

இஸ்ரேலில் உள்ள மக்களை இலக்காக கொண்டு ஏவுவதற்காக 60 ராக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

டெல் அவிவ்,

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென புகுந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டது.

இதனை தொடர்ந்து, சிலரை பணய கைதிகளாகவும் பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களில் ஈடுபட்டது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் வழியாக, பணய கைதிகள் விடுவிப்பும் நடந்தது. எனினும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என்று இஸ்ரேல் அரசு உறுதி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில், காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத தளங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

இதில், அவர்களுடைய 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதளங்கள் அழிக்கப்பட்டன. இதுதவிர, பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

காசாவின் பெய்த் லஹியா பகுதியில் அமைந்திருந்த ராக்கெட் ஏவும் வசதிகள் கொண்ட பகுதிகளை இஸ்ரேல் படையினரின் விமானங்கள் கண்டறிந்து, தாக்குதல் நடத்தி அழித்தன.

இவற்றில் 60 ராக்கெட்டுகள், இஸ்ரேலில் உள்ள மக்களை இலக்காக கொண்டு ஏவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த மோதலின்போது, பயங்கரவாதிகள் பலரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

வடக்கு ஷாதி, கான் யூனிஸ் ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு ஹெலிகாப்டர் மற்றும் விமானம் ஆகியவை தாக்குதல் நடத்தின. இதில், இஸ்ரேல் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த கண்காணிப்பு நிலை ஒன்று அழிக்கப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்