வியட்நாம்: மறுவாழ்வு மையத்தில் இருந்து 100 போதை அடிமைகள் தப்பி ஓட்டம்
|நாடு முழுவதும் போதைக்கு அடிமையான 30,000க்கும் மேற்பட்டோர் அரசாங்க மறுவாழ்வு மையங்களில் கட்டாய சிகிச்சையில் உள்ளனர்.
ஹனோய்:
வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த மையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கிருந்து போதைக்கு அடிமையானவர்கள் தப்பிச் செல்லும் நிகழ்வும் தொடர்கதையாகிறது.
அவ்வகையில் மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 191 பேர் தப்பிச் சென்றுள்ளனர். அறைகளின் கதவை உடைத்து வெளியேறிய அவர்கள் பாதுகாவலர்களை தாக்கிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளனர். சிலர் சுவரில் ஓட்டை போட்டு அதன்வழியாக வெளியேறி உள்ளனர்.
தப்பிச் சென்றவர்களில் இன்று மதிய நிலவரப்படி 94 பேர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். சுமார் 100 பேரை போலீசார் மற்றும் குடும்பத்தினர் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் போதைக்கு அடிமையான 30,000 க்கும் மேற்பட்டோர் அரசாங்க மறுவாழ்வு மையங்களில் கட்டாய சிகிச்சையில் உள்ளனர். இங்கு, போதைக்கு அடிமையானவர்களை திருத்துவதற்காக கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சிலர் சட்டப்பூர்வமாக இரண்டு ஆண்டுகள் வரை உள்ளே செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விதிகளை மீறினால் தனிமைச்சிறையிலும் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.