< Back
உலக செய்திகள்
இடை விடாது நீடிக்கும் தாக்குதல்; இஸ்ரேல்-ஹமாஸ் போர் 100 நாட்களை  தாண்டியது
உலக செய்திகள்

இடை விடாது நீடிக்கும் தாக்குதல்; இஸ்ரேல்-ஹமாஸ் போர் 100 நாட்களை தாண்டியது

தினத்தந்தி
|
15 Jan 2024 11:00 AM IST

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் 100 நாளை தாண்டியுள்ளது. தொடர்ந்து நீடிக்கும் தாக்குதலால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி திடீர் தாக்குதலை நடத்தி சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக முழு அளவிலான போரில் இறங்கிய இஸ்ரேல் காசாவை தொடர்ந்து நிர்மூலமாக்கி வருகிறது. இதில் காசாவில் இதுவரை சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

இதைப்போல இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். சிறை பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோரும் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். லெபனான் எல்லைப்பகுதியில் இருந்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்த தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100-வது நாளை தாண்டியுள்ளது. இஸ்ரேலிய படைகள் காசாவில் ஹமாஸ் நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே காசாவின் தெற்குப்பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக எகிப்துடனான காசாவின் இந்த எல்லையை கைப்பற்றுவதன் மூலம் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுதங்கள் வருவதை தடுக்க முடியும் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதனால் வருகிற நாட்களில் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்