< Back
உலக செய்திகள்
உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் - உலக சுகாதார அமைப்பு தகவல்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

"உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்" - உலக சுகாதார அமைப்பு தகவல்

தினத்தந்தி
|
20 Jun 2022 5:05 AM IST

உலக மக்கள் தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளானால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஜெனீவா,

உலகத்திற்கே பெரும் நெருக்கடியை அளித்த கொரோனா தனிமனிதன் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தின் நிலை, குழந்தைகளின் எதிர்காலம் பற்றி எண்ணி, எண்ணி அவர்களில் பலரும் மனச்சோர்வுக்கு ஆளாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மனச்சோர்வுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2019-ம் ஆண்டுக்கு பிறகு 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதில் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளானோர் பெண்கள் மற்றும் இளைஞர்கள். இவர்களுடன் ஏற்கனவே மன நல பிரச்சினைகளுக்கு ஆளானோர் முன்பு இருந்ததை விட கூடுதல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

2019-ம் ஆண்டுக்கு பிறகு உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதில் இளைஞர்கள், இளம்பெண்களே அதிகம். உலகில் 14 சதவீத இளையோர் மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் பாதிப்பால் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்து உள்ளது.

தற்போது 100 இறப்புகள் நிகழ்ந்தால் அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டவராக இருக்கிறார். மேலும் தற்கொலை செய்பவர்களில் 58 சதவீதம் பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறைகள், கொடுமைகள், பழிவாங்குதல் போன்றவையே தற்கொலைக்கு தூண்டுவதாக அமைகிறது.

உலக மக்கள் தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளானால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும். இதனை தடுக்க அனைத்து நாடுகளும் மக்களின் மனச்சோர்வை போக்க தேவையான நடவடிக்கைககளை உடனடியாக எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்