ஆப்-களால் 10 லட்சம் பயனாளர் விவரங்கள் திருட்டு; பேஸ்புக் அதிர்ச்சி தகவல்
|தீங்கு விளைவிக்கும் செயலிகளால் 10 லட்சம் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டு உள்ளன என பேஸ்புக் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.
வாஷிங்டன்,
நவீன உலகில் செல்போன், கணினி பயன்பாடு மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு தனிநபரின் கையிலும் உள்ள செல்போன், அவர்களின் ஓர் அங்கம் ஆக மாறியுள்ளது.
இந்த சூழலில், விளையாட்டுகள், வி.பி.என்.கள், புகைப்பட டிசைன்கள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காக செல்போன் மற்றும் கணினியில் செயலிகளை பதிவிறக்கும்போது அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் மெட்டா அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், ஆப்பிள் மற்றும் கூகுள் செயலிகள் மையத்தில் என மொத்தம் 402 தீங்கு விளைவிக்கும் செயலிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் 355 ஆண்டிராய்டு தளங்களிலும், 47 ஐ.ஓ.எஸ். தளங்களிலும் இயங்க கூடியவை.
இவை பயனாளர்களிடம் மோசடி செய்வதற்கு என பல தந்திரங்களை கையாளுகிறது. போலியான விமர்சனங்கள் மற்றும் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்ய தூண்டுகிறது. இதனால், உங்களது பணம் மற்றும் லாக்இன் செய்ய கூடிய விவரங்கள் திருடப்பட கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த செயலிகள் பதிவிறக்கத்தின்போது, பேஸ்புக் வழியே லாக்இன் செய்யுங்கள் என்பன போன்ற விசயங்களுக்கு பயனாளர்கள் தூண்டப்படுவார்கள். இதனால், என்ன நோக்கத்திற்காக செயலியை திறக்கிறோமோ, அதனை செய்வதற்குள் திசை திருப்பி விடப்படுவீர்கள்.
ஒரு வேளை பேஸ்புக் விவரங்களை பகிர்ந்து கொண்டால் அதன் பின்பு, அவை திருடப்படும் சாத்தியம் உள்ளது. தங்களது கணக்குகள் மற்றும் பிற விவரங்களை பயனாளர்கள் தெரியாமல் பகிர்ந்து கொள்ள கூடிய கட்டாயம் ஏற்படுகிறது என பேஸ்புக் அமைப்பு சுட்டி காட்டியுள்ளது.
எனினும், இந்த செயலிகள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் பிளேஸ்டோர் மையங்களில் முதல் இடத்தில் உள்ளன என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.