தினமும் 10 லட்சம் போலி கணக்குகள் நீக்கம் டுவிட்டர் நிறுவனம் தகவல்
|அண்மை காலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
சான்பிரான்சிஸ்கோ,
அண்மை காலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த போலி கணக்குகள் பெரும்பாலும் மோசடி செய்வதற்கும், தவறான தகவல்களை பரப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் டுவிட்டரில் போலி கணக்குகள் விவகாரம் தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வருகிறது. டுவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்ட உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டரில் 5 சதவீதம் போலி கணக்குகள் மட்டுமே இருக்கின்றன என்பதற்கான ஆதரத்தை காட்டும் வரையில் ஒப்பந்தம் அடுத்தக்கட்டத்துக்கு நகராது என அறிவித்தார்.
இந்த நிலையில் போலி கணக்குகள் தொடர்பாக விவாதிப்பதற்கான டுவிட்டர் நிர்வாகிகளின் கூட்டம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. அப்போது டுவிட்டரில் தினமும் 10 லட்சம் போலிகணக்குகள் நீக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.