சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 10 பேர் காயம் என தகவல்
|சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஜிங்,
சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் நேற்று நள்ளிரவில் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நமது அண்டை நாடான சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ள நிலையில், கட்டிடங்கள் இடிந்து மக்கள் காயமடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டாக் மாகாணம் டெசா நகர் அருகே இன்று அதிகாலையில் மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.33 மணியளவில் சீனாவின் டெசா நகர் அருகே திடீரென கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் கண்விழித்து அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. வீடுகள் உள்பட மொத்தம் 74 கட்டிடங்கள் இடிந்து சேதமான நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் ஏற்படவில்லை. மேலும் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்நாட்டின் நிலநடுக்க அதிர்வை பதிவு செய்யும் மையம் உறுதி செய்துள்ளது. அதாவது சீனாவின் தலைநகர் பீஜிங் பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தெற்கு பகுதியில் டெசோ நகர் அமைந்துள்ளது.
இந்த நகரில் இருந்து தெற்கே 26 கிலோ மீட்டர் தெலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.