< Back
மாநில செய்திகள்
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ள ஆவணங்கள் போதுமானது மண்டல அதிகாரி வசந்தன் தகவல்
மதுரை
மாநில செய்திகள்

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ள ஆவணங்கள் போதுமானது மண்டல அதிகாரி வசந்தன் தகவல்

தினத்தந்தி
|
17 Jun 2023 1:30 AM IST

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களுக்கு பதிலாக டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ள ஆவணங்களை காண்பித்து பாஸ்போர்ட் பெறலாம் என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.


மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களுக்கு பதிலாக டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ள ஆவணங்களை காண்பித்து பாஸ்போர்ட் பெறலாம் என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.

டிஜிலாக்கர்

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடந்த 2016-ம் ஆண்டு டிஜிலாக்கர் என்று சொல்லப்படும் ஆன்லைன் சான்றிதழ் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, ஆதார் எண் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத அரசால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் இந்த இணையதளத்தில் அல்லது செல்போன் செயலியில் கணக்கு தொடங்கி சேமித்து வைக்கலாம். கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியமாகும். இதில் மத்திய, மாநில அரசு சான்றிதழ்களை சேமிக்க முடியும்.

இந்த சான்றிதழ்களை தேவைப்படும் இடங்களில் ஒரிஜினல் சான்றிதழ்களுக்கு பதிலாக சமர்ப்பிக்கும் வசதி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. வங்கிக்கணக்கு தொடங்க, சமையல் கியாஸ் இணைப்பு பெற, விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றிதழ் தேவைப்படும் இடங்களில் இந்த டிஜிலாக்கர் சேமிப்பு கணக்கில் உள்ள ஆவணங்களை காண்பித்தால் போதுமானது.

குறிப்பாக போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் லைசென்சு, இன்சூரன்சு உள்ளிட்ட பிரதிகளை கேட்கும் போது, டிஜிலாக்கர் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் லைசென்சு உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்தால் போதும், இருப்பினும் இந்த திட்டம் அரசின் அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படவில்லை. கே.ஒய்.சி. (முகவரி, புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்) தேவைப்படும் இடங்களில் கையில் செல்போன் இருந்தால் போதுமானது.

இதற்கிடையே, பாஸ்போர்ட் அலுவலகங்களில் வயது மற்றும் முகவரி சான்றிதழ்களாக விண்ணப்பதாரரின் ஆதார், பிறப்பு சான்றிதழ், பள்ளி மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. உதாரணமாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளன.

இந்த மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மதுரை மற்றும் நெல்லையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக மதுரைக்கு அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரை சேவை மையத்துக்கும், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நெல்லை சேவை மையத்துக்கும் வருகை தருகின்றனர்.

மதுரை மண்டலத்தில்

அவ்வாறு பயணம் செய்து வரும் போது பலர் தாங்கள் கொண்டு வரும் ஒரிஜினல் ஆவணங்களை தொலைத்து விடுகின்றனர். அதனை தொடர்ந்து, பாஸ்போர்ட் சேவை மையங்களில் இ.ஆதார் மூலம் ஆதார் எண் மட்டும் சரிபார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அனைத்து ஆவணங்களையும் டிஜிலாக்கரில் சேமித்து வைத்திருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு ஒரிஜினல் ஆவணங்களை கையில் கொண்டு வர வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, நெல்லை சேவை மையங்களிலும் உடனடியாக அமலுக்கு வருவதாக மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார். அதாவது, செல்போனில் டிஜிலாக்கர் செயலி இருக்க வேண்டுமென்பதில்லை. டிஜிலாக்கர் இணையதள கணக்கு வைத்திருந்து, ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தால் அதனை சேவை மையங்கள் விண்ணப்பதாரரின் பயனர் முகவரி மூலம் சரிபார்த்துக்கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்களில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் கவுண்ட்டர்களிலும் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்