< Back
மாநில செய்திகள்
மழை பாதிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலக் குழுக்கள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு
மாநில செய்திகள்

மழை பாதிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலக் குழுக்கள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு

தினத்தந்தி
|
22 Jun 2022 1:51 AM IST

பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 336 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இந்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழ்நாட்டில் நேற்று வரை 65.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும 85 விழுக்காடு கூடுதல்ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்திற்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்கப்பெறும் என்ற நிலையில் கடந்த 19.6.2022 அன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையை விட மிக மிக அதிகம் ஆகும்.

தமிழகத்தில், பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, தொடர்புடைய மாநகராட்சிகளும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

இதுமட்டுமின்றி, 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும், TNSMART செயலி மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்."

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்