கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்
|பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை என்று வேளாண்மை-உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை தி.மு.க. அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது?
சசிகலாவுக்கு வேண்டப்பட்டவரும் அ.தி.மு.க. பிரமுகருமான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலத்தை முழுமையாக மீட்டது தமிழ்நாடு அரசு.
115 கிரவுண்ட் நிலத்தை சட்டப் போராட்டம் மூலம் மீட்டதோடு ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் கலைஞர் பூங்காவாக மாற்றி திறந்து வைத்திருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த கோபம்தான் பழனிசாமிக்கு இப்போது ஜிப்லைன் பழுதில் வெளிப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப்பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.
எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப்லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை. மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி அவர்கள் தேங்கினர்.
பின்னர் அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர். ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்றவற்றிற்கு அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.