தூத்துக்குடி அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து குதித்த யூடியூபர் கைது
|சாத்தான்குளம் அருகே 'ரீல்ஸ்' மோகத்தில் குளத்து தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து குதித்த யூடியூபர் தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அங்குள்ள பம்புசெட் அறையை சூழ்ந்தும் தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சில வாலிபர்கள் சென்றனர். அவர்கள் குளத்தின் ஓரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அப்போது, அதில் பம்புசெட் அறையில் மேல் இருந்து ஒருவர் குதித்து சாகசம் செய்வது போன்று வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
இதேபோன்று அங்குள்ள செம்மண் தேரியிலும் வாலிபர்கள் குழி தோண்டி, அதில் ஒருவர் தலைகீழாக நின்று, கால்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் மண்ணால் மூடுவது போன்றும் சாகச வீடியோ வெளியிட்டு பதற வைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தை அடுத்த வாலத்தூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (வயது 23), முருகன் மகன் சிவகுமார் (19), வீரபுத்திரன் மகன் இசக்கிராஜா (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து சாகச வீடியோக்களை எடுத்துள்ளனர்.
மேலும் பிரபல யூ-டியுபரான ரஞ்சித் பாலா 'ரீல்ஸ்' மோகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மேற்கண்ட சாகச வீடியோக்களில் ஈடுபட்டும், அதை பதிவு செய்து யூ-டியுப், இன்ஸ்டராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சித் பாலா, சிவகுமார், இசக்கிராஜா ஆகிய 3 பேர் மீதும் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதுதொடர்பாக ரஞ்சித் பாலா, சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர்.