பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு
|பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் அருகே சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து டி.டி.எப். வாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனிடையே போலீசார் டி.டி.எப். வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல், கவனக்குறைவாக செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
வாசன் தரப்பில் 2 முறை ஜாமீன் கேட்டு ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 3-வது முறையும் காஞ்சீபுரம் மாவட்ட கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனால் காஞ்சீபுரம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவர் வாபஸ் பெற்றார். இதனிடையே வாசனின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததால் அவர் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.