< Back
மாநில செய்திகள்
யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ் - சென்னை காவல்துறை நடவடிக்கை
மாநில செய்திகள்

யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ் - சென்னை காவல்துறை நடவடிக்கை

தினத்தந்தி
|
12 May 2024 3:06 PM IST

சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருப்பதால், சென்னை காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சென்னை,

காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் சவுக்கு சங்கரின் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் போலீசார் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். அப்போது மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 லட்சம் பணம், கஞ்சா அடங்கிய 4 சிகரெட்டுகள், கார், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஆவணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கோவை சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்