காதலி வீட்டு முன் தீக்குளித்த வாலிபர் கவலைக்கிடம்: குமரியில் பரபரப்பு
|குமரியில் காதலி வீட்டு முன்பு தீக்குளித்த வாலிபருக்கு கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்லங்கோடு,
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஆற்றுப்புறம் பகுதியில் நேற்று மாலையில் 25 வயதுடைய ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்து தன்மீது பெட்ரோலை ஊற்றி திடீரென தீயை பற்ற வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவர் வலியால் அலறி துடித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வாலிபர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி அவர் உடல் முழுவதும் கருகின. இதையடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கடை பகுதியை சேர்ந்த முகேஷ் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் ஆற்றுப்புறம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் வாலிபர் பெட்ரோல் கேனுடன் மோட்டார் சைக்கிளில் வரும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.