விதவையை கர்ப்பமாக்கி கைவிட்ட இளைஞர்: பிறந்த குழந்தையை விற்று, தப்பிக்க நினைத்த நிலையில் கைது
|கணவனை இழந்த பெண்ணை காதல் வலையில் விழ வைத்து கர்ப்பமாக்கிய இளைஞர், பிறந்த குழந்தையை விற்று, தப்பிக்க நினைத்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் மாக்கனூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், ஆம்பூரில் உள்ள ஷூ கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த அவருக்கும் அவருடன் பணியாற்றிய ஜீவா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பம் தரித்திருக்கிறார். இதையடுத்து பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையையும் அந்த பெண்ணையும் ஜீவாவின் வீட்டார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணை கைவிட நினைத்த ஜீவா, திருமணமாகி குழந்தை இல்லாமல் தவித்து வந்த நாட்றம்பள்ளியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரிடம் 2 லட்ச ரூபாய்க்கு குழந்தையை விற்றிருக்கிறார்.
இதன் பிறகு அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ ஜீவா மறுத்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து ஜீவாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக விற்கப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார், அந்த பெண்ணின் தோழி உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.