'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் பார்த்து விபரீதத்தில் இறங்கிய இளைஞர் - 300 அடி ஆழத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்
|செங்குட்டுவராயன் மலைக்கு சுற்றுலா சென்ற 10 இளைஞர்கள் தடை செய்யப்பட்ட மலை ஏற்றத்திற்குள் நுழைந்து டிரெக்கிங் சென்றுள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு கடந்த 15-ம் தேதி 10 இளைஞர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது 'மஞ்சும்மல் பாய்ஸ்' பட பாணியில் 10 இளைஞர்களும், தடை செய்யப்பட்ட மலை ஏற்றத்திற்குள் நுழைந்து டிரெக்கிங் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மலையில் இருந்த தேனீக்கள் கூடு கலைந்ததாகவும், இதனால் இளைஞர்கள் சிதறி ஓடியதாகவும் கூறப்படும் நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்போது, ஒரு இளைஞர் மட்டும் காணாமல் போனதை அறிந்த மற்ற இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோபால்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார் என்ற அந்த இளைஞரை அவரது நண்பர்கள் மலை முழுவதும் கத்தி கூச்சலிட்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், டிரோன் மூலம் இளைஞரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மலையில் உள்ள பள்ளம் ஒன்றில் 300 அடிக்கும் கீழ் இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.