மயிலாடுதுறை
பள்ளிக்கல்வித்துறை சார்பில் இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலம்
|மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளின் “இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலத்தை” மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலம்
அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி நேற்று நாட்டுநலப்பணித்திட்ட மாணவ,மாணவியர்களை கொண்டு இளைஞர் எழுச்சி ஊர்வலம் நடந்தது.
தொடங்கி வைக்கப்பட்ட இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலத்தில் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி,புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளி , டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த நாட்டுநலப்பணித்திட்ட மாணவ,மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டு இளைஞர் எழுச்சி நாள் பதாகைகள் ஏந்தி சென்றனர். ஊர்வலமானது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மகாதானத் தெரு வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது.
அறிவியல் கண்காட்சி
இன்று (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் அப்துல்கலாமின் வளர்ச்சி திட்டங்கள், இலக்குகள் குறித்த சொற்பொழிவு, 19 மற்றும் 20-ந் தேதி ஆகிய தினங்களில் மாவட்ட அளவில் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையிலான தெரிவு செய்யப்பட்ட தலைப்புகளில் பேச்சுப்போட்டி, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் பங்குபெறும் அறிவியல் கண்காட்சி, மாவட்ட அறிவியல் மையம் சார்பில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மாணவர்கள் பார்வையிட செய்தல் போன்றவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.