பெரம்பலூர்
இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
|இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், சாரணர் இயக்கத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், விடுதி பள்ளி மாணவ-மாணவிகள், அரசு மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் அப்துல்கலாம் கூறிய கருத்துகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். ஊர்வலம் வெங்கடேசபுரம், சங்குபேட்டை வழியாக சென்று புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெகன்நாதன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சாரணர் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.