< Back
மாநில செய்திகள்
பெரியாரைப் பற்றி இளைஞர்கள் முழுமையாக படிக்க வேண்டும் - பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்
மாநில செய்திகள்

'பெரியாரைப் பற்றி இளைஞர்கள் முழுமையாக படிக்க வேண்டும்' - பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்

தினத்தந்தி
|
18 Jun 2023 9:46 PM IST

நடிகர் விஜய் கூறியது போல் பெரியாரைப் பற்றி இளைஞர்கள் முழுமையாக படிக்க வேண்டும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.


மதுரை,

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய நடிகர் விஜய், மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று ஓட்டுக்குப் பணம் வாங்க வேண்டாம் என்று கூற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிட வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் நடிகர் விஜய் கூறியது போல் இளைஞர்கள் அம்பேத்கர், பெரியார் பற்றி முழுமையாக படிக்க வேண்டும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-

"அம்பேத்கர் ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்குமான தலைவராக எப்படி எழுந்து நிற்கிறார், அவருடைய ஆளுமையின் வசீகரம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நடிகர் விஜய் சொன்னது போல் இளைஞர்கள் அம்பேத்கரை படிக்க வேண்டும்.

அதே சமயம் ஈ.வே.ரா.வைப் பற்றியும் முழுமையாக படிக்க வேண்டும். அவர் தமிழ் மொழி பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும், தமிழ்த்தாய் வாழ்த்து பற்றியும் கூறிய கருத்துக்கள் பற்றி சில தகவல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இளைஞர்கள் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும்" என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.



மேலும் செய்திகள்