'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம்
|ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை போர் நினைவு சின்னம் அருகே இளைஞர்கள் ‘தண்டால்' எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றிச்சென்றனர்.
தமிழகத்திலும் போராட்டம்
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றுவார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.
பீகார், உத்தரபிரதேசம் உள்பட சில மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறை களங்களாக மாறி இருக்கின்றன. ஆந்திராவிலும் போராட்டம் நடத்த சிலர் முயற்சிப்பதாக வந்ததால், அங்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்திலும் அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நேற்று முன்தினம் திருச்சி ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
தண்டால் எடுத்து போராட்டம்
இந்த நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, திருவண்ணாமலை, திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள போர் நினைவு சின்னம் அருகே நேற்று காலை 7 மணிக்கு ஒன்று கூடினர்.
சுமார் 2.30 மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தை நடத்தினர். அக்னிபத் திட்டத்துக்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்த அவர்கள், கையில் தேசிய கொடியை ஏந்தியபடி "பாரத் மாதா கி ஜே'' என்ற கோஷத்தை எழுப்பியபடி இருந்தனர்.
அப்போது சில இளைஞர்கள் 'தண்டால்' எடுத்தும் போராட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்களில் சிலரை போலீசார் முதலில் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்கள் எங்களை கீழே இறக்கிவிடுங்கள் என்றும், எங்களை இங்கேயே கொன்றுவிடுங்கள் என்றும் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால், கைது செய்தவர்களை போலீசார் இறக்கிவிட்டனர்.
தொடர்ந்து போர் நினைவு சின்னம் அருகே இளைஞர்கள் நின்று 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்து, வழக்கமாக நடத்தும் தேர்வை நடத்த வேண்டும்' என்று கோஷமிட்டு போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் சிலர், 'வாழ்ந்தாலும் ராணுவம், செத்தாலும் ராணுவம்' என்ற லட்சியத்தில் நாங்கள் இதற்காக பயிற்சி எடுத்து வருகிறோம். அப்படி இருக்கும்போது, இப்படி ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால், சரியாக இருக்காது. அக்னிபத் என்ற திட்டத்தை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது' என்றனர்.
கைது
அதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் அன்பு, ரம்யா பாரதி ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடியே இருந்தனர். பின்னர், அவர்களை போலீசார் கைது செய்து மாநகர பஸ்சில் ஏற்றிச்சென்றனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்து, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு வைத்தனர். அங்கும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பாதுகாப்புத்துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் வந்து தங்களுடைய கோரிக்கையை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியபடி இருந்தனர்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக திடீரென்று போர் நினைவு சின்னம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அகற்றப்பட்டதும் அதன் பிறகு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இலவசமாக பஸ் பயணம்
அக்னி பத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இளைஞர்கள் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைத்திருந்தனர். பின்னர் நேற்று மாலை அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி, 'வழக்கமாக சாலையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வோம். ஆனால் எதிர்காலம் கருதி வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே இதுபோன்ற போராட்டத்தை நீங்கள் முன்னெடுக்காதீர்கள். உங்களுடைய கோரிக்கையை தொடர்ந்து அமைதியான முறையில் வலியுறுத்துங்கள்' என்றார்.
அதனைத்தொடர்ந்து வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து போராட்டத்துக்கு வந்திருந்த இளைஞர்கள், சொந்த ஊர் செல்வதற்காக அவர்களுக்கு 9 பஸ்களை போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக அவர்கள் டிக்கெட் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் எங்கள் கோரிக்கைக்கு தீர்வு என்ன? என்று கேட்டனர். அதற்கான பதில் வரும் என்று மட்டும் போலீசார் கூறினர்.