< Back
மாநில செய்திகள்
செல்போனை திருடியதால் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை; நண்பர்கள் கைது
சென்னை
மாநில செய்திகள்

செல்போனை திருடியதால் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை; நண்பர்கள் கைது

தினத்தந்தி
|
29 Aug 2022 11:01 AM IST

செல்போனை திருடிய ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போன் திருட்டு

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு (வயது 24). இவர், தண்டையார்பேட்டை இளைய முதலி தெரு மேம்பாலத்துக்கு கீழே நண்பர்களான தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த மகேஷ் (29), வைரமுத்து (24) உள்ளிட்டவர்களுடன் தங்கி இருந்தார்.

இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் சிறு சிறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நண்பர்கள் அனைவரும் வழக்கம்போல் மேம்பாலத்துக்கு அடியில் படுத்து தூங்கினர்.

அப்போது மகேசின் செல்போனை அப்பு திருடிவிட்டார். இதையறிந்த மகேஷ், தனது செல்போனை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு அப்பு, "செல்போனை தர முடியாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்" என்று கூறிவிட்டார்.

கல்லைப்போட்டு கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ், தனது நண்பர் வைரமுத்துவுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாட்டுவண்டியில் தூங்கிகொண்டிருந்த அப்புவை கீழே தூக்கி போட்டு, அருகில் கிடந்த பெரிய கல்லை அவரது தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அப்பு, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், வைரமுத்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்