அம்மிக்கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை... முன்விரோதத்தால் நேர்ந்த சோகம்
|வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாக்கம்,
சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்தவர் கலைவாணன் (25 வயது). இவரது மனைவி சவுந்தர்யா (25 வயது). நேற்று முன்தினம் இரவு கலைவாணன், மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மது அருந்திவிட்டு வந்ததால் அவரது மனைவி வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கலைவாணன், வீட்டு வாசலில் படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் யாரோ அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தனர். கலைவாணனின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அவரது மனைவி, வெளியே வந்து பார்த்தார். அப்போது கலைவாணன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் மனைவியின் கண்முன்னே கலைவாணன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட கலைவாணன், அதே பகுதியை சேர்ந்த வசந்த் (21 வயது) என்பவரின் தாயுடன் சில மாதங்களுக்கு முன் தகராறு செய்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த வசந்த், தனது நண்பர்களான தமிழ், சந்தோஷ், அருண் ஆகியோருடன் சேர்ந்து கலைவாணன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வசந்த் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கலைவாணன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்பட 7 வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் உளவாளியாக கலைவாணன் செயல்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.