சென்னை
மோட்டார்சைக்கிளை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை - உடன் வந்த இளம்பெண்ணிடம் போலீஸ் விசாரணை
|மோட்டார்சைக்கிளை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சுதா சந்தர்(வயது 22). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் சுதா சந்தர், தனது மோட்டார் சைக்கிளில் ஒரு இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு புழல் விநாயகபுரம் கல்பாளையம் சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, மார்பு, தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுதா சந்தர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், கொலையான சுதா சந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதா சந்தருடன் வந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.