கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை அருகே சோகம் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
|உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடைய நந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் சவுமிய நாராயணன் (வயது 30). இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இதற்காக கம்பி வேலை நடந்து வருகிறது. இந்த வேலைக்கு, தேவையான கட்டுமான கம்பிகளை வெட்டும் எந்திரத்துக்கு மின் இணைப்பு கொடுக்க சவுமிய நாராயணன் முயற்சித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார்.
சாவு
உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சேந்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிர் இழந்த சவுமிய நாராயணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.