< Back
மாநில செய்திகள்
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தினத்தந்தி
|
6 April 2023 2:10 AM IST

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்;

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமியுடன் பழக்கம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மருதாநல்லூர் 11-வது வேலி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் அய்யப்பன்(வயது 25). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள கிராமத்தில் நடந்த திருவிழாவை பார்ப்பதற்காக தனது நண்பர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கு அதே பகுதியில் 11-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்கினார்.இந்த விஷயம் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்ததால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகு குடும்ப பிரச்சினை காரணமாக பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு, சூப்பர் மார்க்கெட்டிற்கு அந்த சிறுமி வேலைக்கு சென்றார். அதன்பிறகும் செல்போன் மூலமாக அந்த சிறுமியை அய்யப்பன் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

திருமணம்

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி அந்த சிறுமியை அய்யப்பன் அழைத்து சென்று வலங்கைமான் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் மருதாநல்லூரில் குடும்பம் நடத்தி வந்தனர். இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி அய்யப்பனையும், அந்த சிறுமியையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து அந்த சிறுமியை தாயிடம் ஒப்படைத்தனர். பின்னர் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரணை நடத்தி போக்சோ மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கை தற்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தொடர்ந்து நடத்தி வந்தார்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் அரசு தப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்