< Back
மாநில செய்திகள்
செங்குன்றத்தில் வாலிபர் வெட்டிக்கொலை - போலீஸ் நிலையத்தில் அக்காள் கணவர் சரண்
சென்னை
மாநில செய்திகள்

செங்குன்றத்தில் வாலிபர் வெட்டிக்கொலை - போலீஸ் நிலையத்தில் அக்காள் கணவர் சரண்

தினத்தந்தி
|
18 Nov 2022 9:50 AM IST

செங்குன்றத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் அவரது அக்காள் கணவர் சரண் அடைந்தார்.

சென்னை கிண்டி மடுவாங்கரை முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 28). வெல்டர். இவருடைய மனைவி செல்வி. இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கணவர் செல்வக்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செங்குன்றம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வரும் தனது மனைவி செல்வியின் தம்பியான நாகராஜ்(25) என்பவரது வீட்டுக்கு செல்வக்குமார் வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு ெசல்வக்குமார்-நாகராஜ் இருவரும் வீட்டில் அமர்ந்து மது அருந்தினார்கள். அப்போது குடிபோதையில் இருந்த செல்வக்குமார், தனது மைத்துனர் நாகராஜியிடம், "என் மனைவி என்னை விட்டு பிரிந்து செல்வதற்கு நீ தான் காரணம்" என்று கூறி தகராறு செய்தார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து நாகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த நாகராஜ், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து செல்வக்குமார் அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு நேராக செங்குன்றம் போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்