< Back
மாநில செய்திகள்
மதுரையில் முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
மதுரை
மாநில செய்திகள்

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
3 Oct 2023 3:52 AM IST

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


ரவுடி

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 36). இவர் மீது நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இவர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பேச்சிமுத்து, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டது. பின்னர் அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், பேச்சிமுத்துவை சரமாரியாக வெட்டினர். இதில் பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர்நகர் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பன்றி வளர்க்கும் பிரச்சினையில் கடந்த 2011-ம் ஆண்டு பாண்டி கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பேச்சிமுத்து கைது செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த, கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, அதே பகுதியை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்