திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
|கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இரும்பு உருக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருபவர் சீதாராமன். இவரது நண்பர் விகாஸ்குமார் (வயது 19). பிகார் மாநிலத்தை சேர்ந்த இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் நண்பர் சீத்தாராமனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
விகாஸ் குமார் அந்த பகுதியில் வேலை தேடி வந்தார். மேலும் சீதாராமனிடம் ஒரு வேலை தேடி வரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீத்தாராமன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விகாஸ்குமாரை அழைத்து சென்றார்.
அங்கு இருவரும் தொழிற்சாலையில் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 20 அடி உயரத்தில் இருந்து விகாஸ்குமார் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சீதாராமன் உடனடியாக மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பீகாரில் வசிக்கும் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று கும்மிடிப்பூண்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் போரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.