< Back
மாநில செய்திகள்
போலீஸ் காவலில் வாலிபர் சாவு: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

போலீஸ் காவலில் வாலிபர் சாவு: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
3 Aug 2022 10:44 AM IST

போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு வழங்கியது.

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின் போது அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்தது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றம்சாட்டப்பட்ட தலைமை செயலக காலனி போலீஸ்காரர் பவுன்ராஜ், ஏட்டு முனாப், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மனுதாரர்கள் 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்