தூத்துக்குடி
விபத்தில் வாலிபர் சாவு
|எட்டயபுரத்தில் நடந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் வடக்கு ரதவீதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் எல்லை முத்துமாரியப்பன் (வயது 16). இவரது நண்பர் எட்டயபுரம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த கார்த்திக் (20). நேற்று முன்தினம் இரவு கார்த்திக்கை மோட்டார் சைக்கிளில் அவரது ஊரில் விடுவதற்கு எல்லை முத்துமாரியப்பன் முடிவு செய்தார். அதன்படி மோட்டார் சைக்கிளில் இருவரும் எட்டயபுரத்தில் இருந்து புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல கார்த்திக் முயன்றார்.
அப்போது எதிரே சாலையில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பு மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த எல்லை முத்துமாரியப்பன் தூக்கி வீசப்பட்டார். அவர் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எல்லை முத்துமாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.