< Back
மாநில செய்திகள்
இளம்பெண்ணை காதலித்ததால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: உறவினர்கள் வெறிச்செயல்
மாநில செய்திகள்

இளம்பெண்ணை காதலித்ததால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: உறவினர்கள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
19 Jun 2024 5:26 AM IST

காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட, ஓட துரத்திச்சென்று 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 23). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகை என்பதால் தனது நண்பர்களுடன் கேரளா செல்வதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது காதல் விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக அப்துல் அஜீசை அந்த பெண்ணின் உறவினர்கள் அழைத்துள்ளனர். அப்துல் அஜீசும் திருப்பூர் நொய்யல் ஆறு மின்மயானம் அருகே சென்று அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் கொண்ட கும்பல் அப்துல் அஜீசை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. அவர் அங்கிருந்து தப்பி ஓடியபோது பின்னால் துரத்திச்சென்று அந்த கும்பல் வெட்டியது. இதில் அப்துல் அஜீசின் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று காயத்துடன் கிடந்த அப்துல் அஜீசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட, ஓட துரத்திச்சென்று 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை வடக்கு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்