சென்னை
கீழ்கட்டளையில் கல்குவாரி குட்டையில் குதித்து வாலிபர் தற்கொலை - வாங்கிய கடனை நண்பர் திருப்பி தராததால் விபரீத முடிவு
|வாங்கிய பணத்தை நண்பர் திருப்பி தராததால் மனமுடைந்த வாலிபர் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை அன்பு நகரில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் ஆண் பிணம் மிதப்பதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் வேளச்சேரி தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு கல்குவாரி குட்டை நீரில் மிதந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்கப்பட்டவர் பழைய பல்லாவரம் துரைக்கண்ணு சாலையை சேர்ந்த யுவராஜ் (வயது 34) என்பதும், இவர் அடையாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அப்போது கல்குவாரி குட்டை கரையோரம் இருந்த கைப்பையில் யுவராஜ் கையொப்பம் இட்டு எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில், தனது நண்பரான கே.கே.நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தன்னிடமிருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கடனாக வாங்கினார்.
இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பணத்தை அவர் திருப்பி கொடுக்காததால் எனது திருமணத்தை எப்படி நடத்துவது என்பது எனக்கு தெரியாததால், மன அழுத்தத்தில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அதில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வர வேண்டிய பணத்தை நண்பரிடம் இருந்து பெற்று தனது தாயிடம் கொடுத்து விடுமாறு கூறி உள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.