< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
14 May 2024 9:52 PM GMT

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த முகளிவாக்கம் கணேஷ் அவென்யூ, சுபஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 31), தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூஜா குமாரி. தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு பூஜா குமாரி வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கணவர் குடிபோதையில் தூங்கி கொண்டிருப்பதாக நினைத்து அருகில் இருந்த தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை வழக்கம் போல் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டியே இருந்தது. பதறிபோன பூஜா அக்கம்பக்கத்தனர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சீனிவாசன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தெரிய வந்தது. மேலும் சூதாட்டம் விளையாட ஆன்லைன் செயலி மூலம் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்று பின்னர் அந்த தொகையை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த ஆன்லைன் செயலியில் இருந்து வந்த லீங்கை தொட்டவுடன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பாமல் பணம் கொடுத்து விட்டதாக குறுஞ்செய்தி சீனிவாசனுக்கு வந்துள்ளது.

மேலும் பணத்தை கேட்டு இவரது புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து அவருக்கு தெரிந்தவர்களின் செல்போன் நம்பர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதனால் மனம் உடைந்த சீனிவாசன் வாங்காத கடனை அடைப்பதற்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து அந்த செயலியில் பணத்தை ெசலுத்தியுள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

எனவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சீனிவாசன் குடிபோதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போனை கைப்பற்றி அதில் உள்ள தகவல்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்