செங்கல்பட்டு
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
|திருமணமான 7 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி அஞ்சாலை. இவர்களுக்கு உதயகுமார், கனகலட்சுமி, மணிகண்டன் (வயது 28) என்ற மகன்களும், கனகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் உதயகுமார் மற்றும் கனகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 3-வது மகனான மணிகண்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் அக்ரி டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு கேளம்பாக்கம் அருகே கரும்பாக்கம் கிராமத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து உரங்கள், வேளாண் பூச்சி மருந்துகள், விதைகள் விற்பனை செய்யும் கடையை சொந்தமாக நடத்தி வந்தார்.
தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வடகடம்பாடியில் இருந்து கரும்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் கடையில் இருந்து நெம்மேலி பேரூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் திருப்போரூர் வழியாக கரும்பாக்கம் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
மடையத்தூர் என்ற இடத்தில் எதிரே காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மணிகண்டனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூளைச்சாவு
தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து மணிகண்டனின் தந்தை ஏகாம்பரம், தாய் அஞ்சாலை, மனைவி ஹேமலதா, சகோதரர் உதயகுமார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து இதயம், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், ஒரு கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளை 7 பேருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். திருமணமாகி ஏழே மாதத்தில் விபத்தில் மரணமடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டு, 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த மணிகண்டனின் குடும்பத்தினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.