பட்டப்பகலில் வீடு புகுந்து 68 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - குமரியில் பயங்கரம்
|பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 75 வயதுடைய அக்காளும், 68 வயது தங்கையும் என 2 மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் தங்கையான மூதாட்டிக்கு திருமணம் ஆகவில்லை. அக்காள் வீட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்றும் அவர் வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். இதனால் 68 வயது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நாகர்கோவில் தட்டான்விளையை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ராஜ்குமார் (வயது33) அந்த வழியாக வந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. மூதாட்டி வீட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த ராஜ்குமார் வீட்டுக்குள் புகுந்தார். போதையில் இருந்த ராஜ்குமார் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை அமுக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த அக்காளிடம் நடந்த சம்பவத்தை 68 வயது மூதாட்டி கூறி அழுதார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வடிவீஸ்வரம் பகுதியில் மது போதையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ராஜ்குமாரை கைது செய்தனர். அதேவேளை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் வீடுபுகுந்து மூதாட்டியை வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.