ராணிப்பேட்டை
17 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
|தக்கோலம் அருகே 17 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா தென்னலூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் பூவரசன் (வயது 19). இவர் திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதே கம்பெனியில் வேலை செய்து வரும் தக்கோலம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் தந்தை தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பூவரசனை தேடி வந்தனர். இந்த நிலையில் நகரிகுப்பம் செக் போஸ்ட் அருகே தக்கோலம் போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக வந்த பூவரசனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.