< Back
மாநில செய்திகள்
தொழிலாளி கொலையில் வாலிபர் கைது; உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தொழிலாளி கொலையில் வாலிபர் கைது; உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
2 July 2022 8:01 PM GMT

நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளி கொலை

நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 26-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார், பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாயாண்டியின் மனைவி புஷ்பா தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் போலீசார் கண்டுபிடிக்காததை கண்டித்து நேற்று முன்தினம் காலை மாயாண்டியின் உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் முடுக்கிவிடப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தாழையூத்து அருகே சிதம்பரநகர் காட்டு பகுதியில் மாயாண்டி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வாலிபர் கைது

கொலை நடந்த இடம் தாழையூத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி மகன் மாரி மதன் (வயது 21) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

காரணம் என்ன?

மாரி மதனுக்கு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பூர்வீகம் ஆகும். இதனால் பெற்றோர் பல்லடத்தில் இருந்த போதும் மாரிமதன் மட்டும் நெல்லைக்கு அவ்வப்போது வந்து பல்வேறு வேலைகள் செய்து வந்தார். இறுதியாக மாயாண்டிக்கு உதவியாக ஆடு தோல் உறித்தல் மற்றும் இறைச்சி வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் ஒரு கோவில் கொடை விழாவில் வெட்டப்பட்ட ஆடுகளை இறைச்சி வெட்டி கொடுத்த வகையில் மாயாண்டி கைவசம் பணம் அதிகமாக இருந்துள்ளது.

சம்பவத்தன்று மாயாண்டியை, மாரி மதன் மதுகுடிக்க அழைத்துச் சென்றுள்ளார். சிதம்பர நகர் காட்டுப்பகுதியில் 2 பேரும் அமர்ந்து மது குடித்த போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாரி மதன் அங்கு கிடந்த கற்களை எடுத்து மாயாண்டி தலையில் போட்டு கொலை செய்ததும், பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2-வது நாளாக போராட்டம்

இந்த சம்பவத்தில் போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்து நேற்று முன்தினம் மாயாண்டி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கரையிருப்பு கிராமத்தில் பந்தல் அமைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், "மாயாண்டி காணாமல் போன புகார் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் ஏற்கனவே மாரி மதனை பிடித்து விசாரித்தார்கள். ஆனால் சரியாக விசாரணை நடத்தாமல் அவரை விட்டு விட்டனர். நாங்கள் மறியல் போராட்டம் நடத்திய பிறகே அவர் உடல் கிடக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். எனவே இதற்கு காரணமான போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயாண்டியை கொலை செய்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரித்து கைது செய்ய வேண்டும். மேலும் மாயாண்டி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்