திருவள்ளூர்
திருத்தணி அருகே திருட்டு வழக்கில் வாலிபர் கைது
|திருத்தணி அருகே திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 25-ந்தேதி வீட்டில் தூங்கி் கொண்டிருந்தார்.
வீட்டில் சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, தனது வீட்டில் இருந்து ஒருவர் ஓடுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த சென்செய்யா (வயது 26) கூச்சலிட்டார். பின்னர் கஜேந்திரன், சென்செய்யா இருவரும் அந்த நபரை பிடிக்க துரத்தி சென்றபோது தப்பித்து ஓடிவிட்டார். தப்பிச்சென்ற நபர் தாடூர் கிராமத்தை சேர்ந்த தரண்சாய் (வயது 25) என்பது தெரிய வந்தது. இருவரும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கஜேந்திரன் வீட்டில் துணி பையில் வைத்திருந்த ரூ.22 ஆயிரம், சென்செய்யா வீட்டில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் போன்றவற்றை தரண்சாய் திருடிச் சென்றது தெரிய வந்தது.
கைது
இது குறித்து கஜேந்திரன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தரண்சாய்யை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.27 ஆயிரத்தை கைப்பற்றினர்.