வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய இளைஞர் ஜார்கண்ட்டில் கைது - திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடி
|ஜார்கண்ட் மாநிலம கெஹா பகுதியில் பதுங்கியிருந்த பிரசாத் குமாரை திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பூர்,
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலீயான வீடியோக்கள் பரவிய நிலையில், வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல்துறையினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடந்த வியாழக்கிழமையன்று தெலங்கானாவில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூரில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலியான தகவல்களை பரப்பிய பிரசாத் குமார் என்ற இளைஞர் ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திருப்பூர் தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று, அங்குள்ள கெஹா பகுதியில் பதுங்கியிருந்த பிரசாத் குமாரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.