< Back
மாநில செய்திகள்
திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 May 2023 11:33 AM IST

திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயி. இவரது மூத்த மகள் ஷாலினி (வயது 22). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஷாலினிக்கு உறவுக்கார நபரை திருமணம் செய்து வைக்க ஷாலினியின் பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் ஷாலினி அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்கு ஷாலினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பின்னர் ஷாலினியின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாகராஜியின் பெற்றோர் ஷாலினியின் தந்தை ஜோதியை சந்தித்து இருவருக்கும் தை மாதத்தில் திருமணம் செய்வது என முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் நாகராஜனின் அண்ணன் முனுசாமி என்ற சீனிவாசன் ஜோதியை தொடர்பு கொண்டு எனது தம்பியை திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால், வரதட்சணை கொடுக்க வேண்டும் என ஷாலினிடம் கேட்டு தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தத்தில் இருந்த ஷாலினி வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜோதி தனது மகளை தற்கொலைக்கு தூண்டிய முனுசாமி (வயது 30) மீது நடவடிக்கை எடுக்குமாறு திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து ஷாலினியை தற்கொலைக்கு தூண்டியதாக முனுசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்