திருவள்ளூர்
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது
|கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 25). இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பணம் பரிமாற்றம் (மணி டிரான்ஸ்பர்) செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதியன்று வழக்கம் போல வசந்தகுமார் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லா உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.75 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வசந்தகுமார் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டவர் உருவம் பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து போலீசார் விசாரணையில் அவர் சென்னை சென் தாமஸ் மவுண்ட் நசரத்பேட்டையை சேர்ந்த கௌதம் (22) என தெரியவந்தது. பின்னர் வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த கௌதமை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர் கொள்ளையடித்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.