பெரம்பலூர்
நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
|நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கத்தியை காட்டி மிரட்டல்
பெரம்பலூர் அருகே எளம்பலூர் 1-வது வார்டு செட்டியார் வீதியை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் கடந்த 10-ந்தேதி இரவு 11 மணியளவில் லுங்கியுடன் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து, அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை கண்ட மருத்துவமனை பணியாளர் ஒருவர் மணிகண்டனை தடுக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மருத்துவமனை பணியாளரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து பிடிக்க ஓடிய மருத்துவ பணியாளருக்கு, மணிகண்டன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இதையடுத்து அந்த நர்சு தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, பலாத்காரம் செய்ய முயன்ற மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.
கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு முன்னதாக மணிகண்டன் பெரம்பலூர் உப்போடையில் டாஸ்மாக் பாரில் ஊழியர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.