சென்னை
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
|சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மகனுக்கு வேலை
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்திரராஜ் (வயது 59). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது மகன் இணையதளம் வாயிலாக வேலை தேடிக்கொண்டிருந்த போது, சென்னை போரூரைச் சேர்ந்த பாலமுருகன் (31) என்பவர் அறிமுகமானார். அவர் எனது மகனுக்கு சிங்கப்பூரில் உள்ள இன்டர்டெக் என்ற கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.42.40 லட்சத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். மேலும் போலியான பணி நியமன ஆணையை அனுப்பி அவர் நம்ப வைத்து மோசடி வலையில் சிக்க வைத்து விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
கைது
இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பாலமுருகன் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது. அவரை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் இதற்கு முன்பும் இது போன்ற மோசடி லீலைகளில் ஈடுபட்டு, அருப்புகோட்டை மற்றும் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.