அரியலூர்
ஷோரூமில் புதிய மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
|ஷோரூமில் புதிய மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இருசக்கர வாகன ஷோரூம்
அரியலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு தனியார் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. நேற்று வாலிபர் ஒருவர் தலையில் துண்டை கட்டிக்கொண்டு அந்த ஷோரூமிற்குள் நுழைந்து, அங்குள்ள மோட்டார் சைக்கிளை வாங்குவதற்கு விலை கேட்பதுபோல் நடித்து, அதன் மீது ஏறி அமர்ந்தார்.
பின்னர் திடீரென்று அந்த மோட்டார் சைக்கிளை இயக்கி, ஷோரூமில் இருந்து வெளியேறி சாலையில் சென்றுவிட்டார். இதனைக்கண்ட கடை ஊழியர்கள் இதுகுறித்து ஷோரூமின் உரிமையாளர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பெட்ரோல் இல்லாததால்...
இதையடுத்து அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் அரியலூர், கயர்லாபாத் மற்றும் உடையார்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் ஈடுபட்டனர். இதற்கிைடயே அந்த மோட்டார் சைக்கிள் புதியது என்பதால், அதில் அரை லிட்டர் பெட்ரோல் மட்டுமே ஊற்றப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல் தீர்ந்தநிலையில், அந்த மோட்டார் சைக்கிளை இயக்க முடியாமல் மணகெதி சுங்கச்சாவடியில் மோட்டார் சைக்கிளுடன் அந்த் நபர் நின்று கொண்டிந்தார்.
அப்போது அங்கு வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரை அரியலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் காஞ்சீபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி மகன் கண்ணன்(வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.