செங்கல்பட்டு
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
|மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களை குறி வைத்து திருடும் நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசார் மகேந்திரா சிட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை வழிமறித்து போலீசார் விசாரித்த போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவலை போலீசாரிடம் அளித்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர் மறைமலைநகர் பகுதியில் 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களையும், மாமல்லபுரம் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள், சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் திருடியதாக ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருடப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களை பரனூர் டோல்கேட் அருகே உள்ள வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் உடனடியாக பரனூர் அருகே உள்ள வனப்பகுதியில் சோதனை செய்தபோது வனப்பகுதியில் 5 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த 5 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 6 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்த சத்தியா (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.