கரூர்
தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
|தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
லாலாபேட்டை அருகே உள்ள கே.பேட்டை காவிரி ஆற்று படுக்கையில் வடிவேல் பொன்னையா என்பவருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணை உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த கருப்பன் (வயது 45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதேபண்ணையில் வேலை பார்க்கும் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சேது (25) என்பவரின் மனைவி வீரலெட்சுமியிடம் அவரது செல்போன் நம்பரை கருப்பன் கேட்டு வாங்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேது எனது மனைவியின் செல்போன் நம்பரை எப்படி வாங்கலாம் என்று கூறி கருப்பனை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கருப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கருப்பன் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சேதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.