< Back
மாநில செய்திகள்
பெயிண்டரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பெயிண்டரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
19 April 2023 12:15 AM IST

கோவையில் செல்போன் தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமத்துல்லா (வயது 29). பெயிண்டர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். குழந்தையில்லை. ரகுமத்துல்லா மீது கோவையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரகுமத்துல்லா பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் தனது நண்பர் மணிகண்டன் (23) என்பவருடன் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு அருகே செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (26) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷின் நண்பரின் செல்போன் காணமல் போனது. இந்த செல்போனை ரகுமத்துல்லா எடுத்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சந்தோஷ் உடனடியாக அங்கிருந்த ரகுமத்துல்லாவிடம் இதுகுறித்து கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து இருதரப்பினரும் டாஸ்மாக் பாரை விட்டு வெளியே வந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் கத்தியால் ரகுமத்துல்லாவை குத்தினார். மேலும் தடுக்க வந்த மணிகண்டனை தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ரகுமத்துல்லா ரத்த வெள்ளத்தில் மிதந்து பலியானார். பின்னர் அங்கிருந்து சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோசை தேடி வந்தனர். இதனிடையே கரூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்